குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களுக்கு நாளை முதலாம் ஆண்டு நினைவு நாள்

மனதை விட்டு அகலாத சோக சம்பவமான, 23 பேரின் உயிர்களை காவு வாங்கிய குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களுக்கு நாளை முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகும்.

Update: 2019-03-09 22:52 GMT
தேனி,

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பலியானவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகும்.

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ 23 பேரின் உயிரைக் குடித்துள்ளது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகும்.

நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவம் ஏன் நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? அதன்பிறகு என்ன ஆனது? என்பதை பார்ப்போம்.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை அரணாக கொண்டு அமைந்து உள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 33 சதவீதம் வனப்பகுதி ஆகும். ஒரு பகுதி விருதுநகர் மாவட்ட வனப்பகுதியோடும், மற்றொரு பகுதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியோடும் இணைகிறது. மற்றொரு புறம் கேரள மாநிலத்தோடு இணைகிறது.

இந்த மலையடிவார பகுதிகளை மையமாக கொண்டு சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவி, குரங்கணி, மேகமலை, ஹைவேவிஸ், சோத்துப்பாறை போன்ற இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா இடங்களும் உள்ளன. மாவட்டத்தில் குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை மட்டுமே மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், குரங்கணியில் இருந்து கொழுக்குமலை, மேகமலை வனப்பகுதி உள்பட மாவட்டத்தில் மேலும் சில இடங்களிலும் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சி மேற்கொள்வது தொடர்கதையாக இருந்து வந்தது.

அதிலும், குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் சென்று வந்தனர். வனத்துறையினரும் இதை கண்டும் காணாமல் இருந்தனர். அனுமதி அளிக்கப்படாத வழித்தடத்தில் மலையேற்றம் சென்று இணையதளங்களிலும் பல்வேறு வகையான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. அதைப் பார்த்தும் வனத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.

இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. பெரியகுளம் அருகே சோத்துப்பாறை வனப்பகுதி, தேனி அருகே வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதி, அகமலை பகுதிகள், மரக்காமலை பகுதிகள், போடி கொட்டக்குடி, குரங்கணி மலைப்பகுதிகள், கூடலூர், தேவாரம் மலைப்பகுதிகள், சண்முகாநதி அணை அருகில் மேகமலை மலையடிவார பகுதிகள், ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் கோடை காலங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் போடி, அருகில் உள்ள குரங்கணி, வடக்குமலை, அகமலை மலைப்பகுதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே காட்டுத் தீ விபத்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ பரவியது. இந்த காட்டுத்தீயில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிர் இழந்தனர். உடல் கருகிய நிலையில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேலும் பலர் உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் மொத்தம் 23 பேர் உயிர் இழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள்.

உயிர் இழந்தவர்கள் சென்னை, ஈரோடு, சேலம் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் 2 குழுவாக மலையேற்றப் பயிற்சிக்கு வந்துள்ளனர். ஒரு குழுவினர் சென்னையில் உள்ள டிரெக்கிங் கிளப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு வந்துள்ளனர். மற்றொரு குழுவினர் ஈரோட்டை சேர்ந்த சுற்றுலா அலுவலகம் மூலம் பேஸ்புக் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு வந்தனர்.

மொத்தம் 39 பேர் மலையேற்றப் பயிற்சி சென்றனர். அவர்கள் கொழுக்குமலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தங்கினர் மறுநாள் அவர்களில் 3 பேர் மீண்டும் நடந்து வர முடியாமல் ஜீப்களில் புறப்பட்டுச் சென்றனர். 36 பேர் மட்டும், மீண்டும் மலையேற்ற பயணமாக குரங்கணி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். குரங்கணிக்கும், கொழுக்குமலைக்கும் இடையே ஒத்தமரம் என்ற இடத்தில் வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தபோது தான் காட்டுத்தீ வேகமாக பரவியது. அதில் தான் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர், கடந்த மார்ச் 21-ந்தேதி தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். மார்ச் 22-ந்தேதி குரங்கணி மலைப்பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். 23-ந்தேதி போடி நகராட்சி அலுவலகத்தில் இந்த தீ விபத்து தொடர்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய 4 துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவு மூலமாகவும் வாக்குமூலம் வாங்கினார். மேலும், அவர் விசாரணை அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார். அதையடுத்து தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

குரங்கணி தீ விபத்து நடந்து ஒரு ஆண்டு ஆகிறது. ஆனால், இப்போது வரை குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது மனிதர்களால் வைக்கப்பட்ட தீயா? என்பது புரியாத புதிராகவே உள்ளது. வனத்துறை தரப்பில் இதுவரை தீ விபத்துக்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் தீ விபத்து நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. தற்போது மலையேற்றத்துக்கு வனத்துறை அனுமதி அளிப்பது இல்லை. இருந்தாலும், வனப்பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் மீண்டும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல இடங்களில் வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிந்த வண்ணம் உள்ளது. இந்த தீ மனிதர்களால் வைக்கப்படுவதாகவே வனத்துறை தரப்பினர் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே, தீ வைப்பவர்களை கண்டுபிடித்து வனத்துறையினர் கடும் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதேபோல், மனிதர்கள் தங்களின் சுய தேவைக்காக தீ வைக்கிறார்கள் என்றால், அவ்வாறு தீ வைப்பவர்கள் ஒரு நிமிடம் குரங்கணியில் தீயில் கருகி 23 மனித உயிர்கள் பலியான சம்பவத்தை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, வனம் பாதுகாக்கப்பட வேண்டியது. கடந்த ஆண்டு நிகழ்ந்தது போன்று இன்னொரு பெரும் சோகம் இனிமேல் வேறு எங்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே எல்லோருடைய எண்ணமாக உள்ளது.

கைவிரித்த ஹெலிகாப்டர்கள்; கைகொடுத்த கிராம மக்கள்

குரங்கணி தீ விபத்து நடந்த அன்று மீட்பு பணிக்காக தீயணைப்பு படை வீரர்கள், போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவ இடமான ஒத்தமரம் பகுதியானது குரங்கணியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஆபத்தான மலைப்பாதையில் நடந்தே செல்ல வேண்டும். காட்டுத்தீ எரிந்து கொண்டு இருந்த நிலையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு துணிச்சலுடன் சென்றனர். சம்பவ இடத்துக்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தன. ஆனால், இரவு நேரம் மலைப்பகுதியில் தரையிறங்க இடவசதி இல்லை என்று அந்த ஹெலிகாப்டர்கள் திரும்பிச் சென்று விட்டன. ஹெலிகாப்டர்கள் கைவிரித்த நிலையில், குரங்கணி, முதுவாக்குடி, கொழுக்குமலை பகுதிகளில் உள்ள மலைக்கிராம மக்கள் மீட்பு பணிக்கு கைகொடுத்தனர். பொதுமக்கள் தங்களிடம் இருந்த போர்வைகள், டோலி கட்டுவதற்கு கம்புகளை கொடுத்து அனுப்பியதோடு, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். இதனால், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் டோலி கட்டியே குரங்கணிக்கு எடுத்து வரப்பட்டனர். மறுநாள் காலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மட்டுமே ராணுவ ஹெலிகாப்டரில் க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த தீ விபத்து சம்பவம் இன்றும் மனதை விட்டு அகலாத சோகமாக தொடர்ந்து வருகிறது.


மேலும் செய்திகள்