சமரச குழுவால் பயனில்லை அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்
அயோத்தி நிலப்பிரச்சினையில் சமரச குழுவால் எந்தவித பயனும் இல்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அவசர சட்டம் பிறப்பித்து ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது .
மும்பை,
அயோத்தி நிலப்பிரச்சினையில் சமரச குழுவால் எந்தவித பயனும் இல்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அவசர சட்டம் பிறப்பித்து ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது .
சமரச குழு
அயோத்தியில் ராமஜென்ம பூமி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அமைத்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
சாதிக்க முடியாது
நாட்டின் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டால் ராமர்கோவில் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை எனில் சமரச குழுவால் என்ன சாதிக்க முடியும்?. சமரச குழுவால் தீர்வு காண முடியும் எனில் ஏன் இந்த பிரச்சினை 25 ஆண்டு காலமாக தொடர்கிறது?. ஏன் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் உயிரிழந்தனர்?.
போராட்டக்காரர்கள் யாரும் சமரச குழுவை விரும்பவில்லை. பின்னர் ஏன் சுப்ரீம் கோர்ட்டு தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது?.
அயோத்தி நிலப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டால் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. இனி இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தான் முடிவு காணப்படும்.
உணர்ச்சிப்பூர்வ பிரச்சினை
அயோத்தியில் இருப்பது நிலப்பிரச்சினை மட்டும் அல்ல. அது உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. எனவே சமரச குழு மற்றும் நடுவர்களை கொண்டு உணர்ச்சிப்பூர்வ பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. உயிரிழந்த போராட்டக்காரர்களை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
சர்ச்சைக்குரிய இடத்தில் 1500 சதுரஅடி நிலத்தில் மட்டுமே பிரச்சினை உள்ளது. மீதமுள்ள 63 ஏக்கர் நிலத்தில் பிரச்சினை இல்லை.
அவசர சட்டம்
அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படும் என மக்கள் ஆணித்தனமாக நம்புகிறார்கள். இதைத் தான் நாங்களும் சொன்னோம். எனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினை நாட்டின் அடையாளமாகவும், பெருமையாகவும் பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் பிரச்சினை கூட இந்துக்களின் பெருமை தான். ஆனால் கடவுள் ராமர் இந்துஸ்தானின் அகதியாகி விட்டார். அவரது சொந்த நிலத்துக்காக மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளார். சட்ட போரில் இருந்து கடவுளால் கூட தப்பிக்க முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பு?.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.