பென்னிகுவிக் நினைவுநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் அஞ்சலி

பென்னிகுவிக்கின் 108-வது நினைவுநாளையொட்டி லோயர்கேம்ப்பில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.;

Update:2019-03-10 04:12 IST
கூடலூர்,

முல்லைப்பெரியாறு அணை கட்டி தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் 1911-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி இறந்தார். நேற்று அவரது 108-வது நினைவு தினத்தையொட்டி, ஒருங்கிணைந்த 5 மாவட்ட முல்லைப்பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் விவசாயிகள் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் எஸ்.ஆர்.தேவர் கூறியதாவது:-

கூடலூர் சுரங்கனாறு அருவிக்கு மேலே கேரளா தடுப்பணை கட்டுவதாக தகவல் வந்துள்ளது. அங்கு தடுப்பணை கட்டினால் கூடலூர் ஒட்டாண்குளத்துக்கு வரும் தண்ணீர் தடைபடும். நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்படும். எனவே அரசு சார்பில் இதுகுறித்து உடனே விசாரித்து தடுப்பணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாய சங்கமே இந்த பிரச்சினையில் நேரில் ஈடுபடும்.

மேலும் முல்லைப்பெரியாறு அணை உரிமையை இழந்தது போதும். இழந்த உரிமையை மீட்க வேண்டும். கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் செயலாளர் சலேத்து, ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், துணை தலைவர் ராஜீவ், பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார், பென்னிகுக் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பாண்டி, கூடலூர் செங்குட்டுவன், பாளையம் ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்