மாநகராட்சி பள்ளியில் சுந்தர் பிச்சை மாணவர்களுடன் கலந்துரையாடினார்
மும்பையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கலந்துரையாடினார்.
மும்பை,
மும்பையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கலந்துரையாடினார்.
மாநகராட்சி பள்ளியில் சுந்தர் பிச்சை
மும்பை அந்தேரி டி.என். நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேற்று முன்தினம் மதியம் தனியார் அமைப்பு சார்பில், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் கூகுளின் ‘Bolo' என்ற செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என நினைத்திருந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆச்சரியம் காத்து இருந்தது.
யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேரில் கலந்து கொண்டார்.
கலந்துரையாடல்
சுந்தர் பிச்சை மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை கண்டு ஆசிரியர்களும், மாணவர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். கூகுளின் செயலியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.
அப்போது, அர்சியா என்ற மாணவி உங்களுக்கு பிடித்தமான உணவு எது? என்று கேட்டார். அதற்கு சுந்தர் பிச்சை ‘பானி பூரி' என்று பதில் அளித்தார். மற்றொரு மாணவர், நான் என்ஜினீயர் ஆக முடியுமா? என்று கேட்டார். அதற்கு உனது வீட்டில் ரேடியோ அல்லது டி.வி. இருக்கிறதா என்று கேட்ட சுந்தர் பிச்சை, அது பழுதான பின்னர் அதனை கழற்ற தெரிந்தாலே போதும் என்றார்.
இந்தநிலையில், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனம் கல்வித்துறையிடம் அனுமதி வாங்கிய போது, சிறப்பு அழைப்பாளராக சுந்தர் பிச்சை வருகிறார் என்பதை தெரிவிக்காமல் இருந்தது தெரியவந்து உள்ளது.