மதுரையில் ரெயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது; நாசவேலைக்கு முயற்சியா?

மதுரையில் ரெயில் தண்டவாளம் பகுதியில் நேற்று காலையில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. நாசவேலைக்கு முயற்சியா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-09 23:45 GMT
மதுரை,

மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றிவிட்டு, அகல ரெயில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ரெயில் பாதையானது மதுரை பழங்காநத்தம் வசந்தநகர் வழியாக செல்கிறது. அந்த பகுதியில் புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

பொதுமக்கள் யாரும் தண்டவாளம் பகுதிக்குள் வராமல் இருக்க அந்த பகுதியில் சுற்றுச்சுவரும் உள்ளது. இந்த நிலையில் வசந்தநகர், மகாலட்சுமிபுரம் அருகே உள்ள தண்டவாளம் பகுதியில் நேற்று காலை 9 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தண்டவாளத்துக்கு அடியில் போடப்பட்டு இருந்த ஜல்லி கற்கள் பறந்து, அருகில் உள்ள வீடுகளில் விழுந்தன. மேலும் குண்டு வெடித்த சத்தம் அந்த பகுதியில் நீண்ட தூரம் வரை கேட்டதால் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு சுப்பிரமணியபுரம் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். வெடித்த குண்டின் சிதைவுகள் அங்கு சிதறிக்கிடந்தன.

சுமார் 200 முதல் 250 கிராம் எடையுள்ள குண்டு வெடித்திருக்கலாம் என வெடிகுண்டு தடுப்பு படை போலீசார் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்து, 30 பால்ரஸ், 10 ஆணிகள் மற்றும் சிதறி கிடந்த சணல்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது தவிர மோப்ப நாய் உதவியுடன் அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதன்பின்னரே அந்த பகுதியில் வேறு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

குண்டு வெடித்த பகுதியின் அருகே வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியில் மதுரை மருத்துவ கல்லூரியில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற முத்து என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் பிளாஸ்டிக் சாக்கில் இருந்த குப்பையை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் வீசியுள்ளார்.

அது கீழே விழுந்தபோதுதான் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

முத்துவுடன், அவருடைய பேரன் பிரவீன்குமாரும் வசித்து வருகிறார். அவர் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவர்தான் அந்த வெடிகுண்டை பிளாஸ்டிக் சாக்கில் குப்பையுடன் பதுக்கி வைத்திருக்கலாம் என தெரியவருகிறது. அதனை குப்பை என்று நினைத்து முத்து எடுத்து வந்து, தண்டவாள பகுதியில் வீசியதால் வெடித்துள்ளது.

பிரவீன்குமாரை நாங்கள் தேடி வருகிறோம். அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. அவரை பிடித்த பிறகுதான் வெடிகுண்டு அவரிடம் எப்படி வந்தது, எதற்காக அதனை வாங்கி வீட்டில் வைத்துள்ளார், யாரையும் கொலை செய்ய திட்டமிட்டு வைத்திருந்தாரா? நாசவேலைக்கு ஏதேனும் முயற்சி நடக்கிறதா? என்பது தெரியவரும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்