சென்னைக்கு புதிய ரெயில் இயக்கம்: குமரி மாவட்ட பயணிகள் வரவேற்பு

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் தற்போது இயக்கப்படுகிறது. இதனை குமரி மாவட்ட பயணிகள் வரவேற்றுள்ளனர்.

Update: 2019-03-09 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட மக்கள் பணி நிமித்தமாக அடிக்கடி சென்னை சென்று வருகிறார்கள். இவ்வாறு செல்பவர்கள் பஸ் பயணத்தை காட்டிலும் ரெயிலில் செல்லவே விரும்புகிறார்கள். ஆனால் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்பவர்களில் பெரும்பாலானோருக்கு ரெயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் வேறு வழியின்றி பஸ்களை நாட வேண்டி இருக்கிறது. எனவே நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில்- தாம்பரத்துக்கு புதிய ரெயில் விட ஏற்பாடு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இந்த புதிய ரெயிலும் இயக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிலைய மேலாளர் பெஸ்டஸ் வில்சன் செய்திருந்தார்.

புதிய ரெயிலில் செல்ல முன்பதிவு செய்யும் வசதியும் இருப்பதால் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. முதல் நாளில் ஏராளமான பயணிகள் புதிய ரெயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும். இங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தை மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு சென்றடையும். இதே போல திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 3 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது. இந்த புதிய ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது. இந்த புதிய ரெயிலுக்கு குமரி மாவட்ட பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதிய ரெயிலில் மொத்தம் 18 பெட்டிகள் உள்ளன. இதில் குளிர்சாதன வசதியுடன் முதல் வகுப்பு பெட்டி ஒன்று உள்ளது. இதுபோல குளிர்சாதன வசதி கொண்ட 3 அடுக்கு பெட்டிகள் 3 இணைக்கப்பட்டு உள்ளன. இதுபோக 10 பெட்டிகளில் படுக்கை வசதி உள்ளன. மீதமுள்ள பெட்டிகள் முன்பதிவு அல்லாத பெட்டிகள் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது இயக்கப்பட்டுள்ள புதிய ரெயில் போக சென்னைக்கு நாகர்கோவில் வழியாக குருவாயூர், அனந்தபுரி மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகின்றன. இதில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் அதிகாலை 5.30 மணிக்கும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மாலை 5.20 மணிக்கும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மாலை 6.20 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்து புறப்படுகின்றன. புதிதாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள அந்த்யோதயா ரெயில் மதியம் 3.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது. இது முன்பதிவு அல்லாத ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்