ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி பாளையங்கோட்டை, தென்காசியில் மனித சங்கிலி நேற்று நடந்தது.
நெல்லை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய மனித சங்கிலி நடைபெற்றது. இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் திருவனந்தபுரம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் தங்களது கைகளை கோர்த்து வரிசையாக நின்றனர். சிலர் 7 பேரை விடுதலை செய்யக்கோரி வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு நின்றனர்.
இதில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் (மாநகரம்) கல்லூர் வேலாயுதம், (வடக்கு) பாப்புலர் முத்தையா, அவைத்தலைவர் ஜெகநாதன் என்ற கணேசன், நாம் தமிழர் கட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ரமேஷ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், செய்தி தொடர்பாளர் ஜமால், எஸ்.டி.பி.ஐ. கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் கனி, மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி உள்ளிட்ட 24 அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலை 6 மணிக்கு மனித சங்கிலி நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் தினகரன், மாவட்ட செயலாளர் அருண்சங்கர், மாநில குழு உறுப்பினர் ஸ்டீபன், தொகுதி தலைவர் அழகுபாண்டியன், பா.ம.க. மாநில துணை தலைவர்கள் அய்யம் பெருமாள், இசக்கிமுத்து, சேது அரிகரன், மாவட்ட செயலாளர் சீதாராமன், மாவட்ட தலைவர் குலாம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.