நாமக்கல் அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை தந்தை கைது
நாமக்கல் அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் அருகே உள்ள வீசாணம் வெங்கசரளைமேடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது50). இவர் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரவிந்தன் (27). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து பெற்றோரை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்த அரவிந்தன், தந்தை பாலமுருகன், தாயார் சாந்தி ஆகியோரிடம் தகராறு செய்து அவர்களை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து அரவிந்தனை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அரவிந்தனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணி அளவில் அரவிந்தன் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து அரவிந்தனின் தாயார் சாந்தி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட அரவிந்தனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.