இறந்தவரின் உடலை எடுத்து சென்ற போது விபத்து: கியாஸ் டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 9 பேர் படுகாயம்

பர்கூர் அருகே கியாஸ் டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-03-09 22:00 GMT
பர்கூர், 

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 59). பாபுவின் அண்ணன் மனைவியான அம்சவேணி என்பவர் சென்னையில் இறந்துவிட்டார். அவரது உடலை பெங்களூரில் உள்ள அவரது வீட்டிற்கு மகாலட்சுமி மற்றும் அவரது உறவினர்களாக சென்னையை சேர்ந்த குணசீலனின் மனைவி நிர்மலா(26), மகள்களான லட்சிகா(6), லட்சணா(6 மாதம்), நிர்மலா(27), பீமராஜ்(19), காந்தம்மாள்(64), கல்பனா(24) ஆகியோருடன் ஆம்புலன்சில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு எடுத்து சென்றனர்.

அந்த ஆம்புலன்சை சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த சபரி(24) என்பவர் ஓட்டி வந்தார். ஆம்புலன்ஸ் நேற்று காலை சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே காரகுப்பம் ரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கியாஸ் டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது. இதில் டிரைவர் உள்பட 9 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த ஆம்புலன்ஸ் பின்னால் வந்த அவர்களது உறவினர்களும் உடனடியாக கீழே இறங்கி, ஏற்கனவே இறந்திருந்த அம்சவேணியின் உடலை மற்றொரு ஆம்புலன்சில் பெங்களூருவிற்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்