பென்னாத்தூரில் காளை விடும் திருவிழா

பென்னாத்தூர் மற்றும் மல்லப்பள்ளியில் நடந்த காளை விடும் விழாவில் 17 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-03-09 22:00 GMT
அடுக்கம்பாறை, 

வேலூர் அருகே பென்னாத்தூர் கேசவபுரத்தில் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு சாலையின் இருபுறமும் மூங்கில்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.ராகவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அருள்நாதன் ஆகியோர் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் சோதனை நடத்தி விழாவில் பங்கேற்க அனுமதி அளித்தனர். பின்னர் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. விழாவில் காளைகள் முட்டியதில் 5 பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விழாவில், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.66 ஆயிரத்து 666-ம், 2-வது பரிசாக ரூ.55 ஆயிரத்து 555-ம் உள்பட51 பரிசுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தாலுகா போலீசாரும், வருவாய்த்துறையினரும் செய்து இருந்தனர்.

இதேபோல் நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளியில் காளைவிடும் திருவிழா நடந்தது. கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு 300 காளைகள் போட்டியில் பங்கேற்றன. விழாவை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேலூர் தனி சப்-கலெக்டர் தினகரன் உறுதிமொழி வாசித்தார்.

நாட்டறம்பள்ளி தாசில்தார் உமாரம்யா முன்னிலை வகித்தார். விழா தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்து இலக்கை நோக்கி ஓடிய காளைகளை அடக்க முயன்ற 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்