கடையநல்லூர், வாசுதேவநல்லூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

கடையநல்லூர், வாசுதேவநல்லூரில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2019-03-09 23:15 GMT
வாசுதேவநல்லூர், 

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. மதியம் 12 மணிக்கு மேல் தார் சாலையில் அனல் காற்று வீசுகிறது. இந்த வெயில் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் பயணிப்பவர்கள் துணியால் முகத்தை மூடி மறைத்தபடியும் சென்று வருகின்றனர்.

நேற்றும் வழக்கம் போல காலை முதலே வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாவட்டத்தின் மேற்கு பகுதியான வாசுதேவநல்லூரில் மாலை 3 மணிக்கு மேல் திடீரென வெயில் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் மாலை 4 மணி அளவில் மழை பெய்தது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக மாறியது. வாசுதேவநல்லூர் மற்றும் ராமநாதபுரம், ஆத்துவழி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் 5 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் ரோடுகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இதேபோல் கடையநல்லூர் பகுதியிலும் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியானதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்