“தாமரை மலரை தாங்கி நிற்கும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

“தாமரை மலரை தாங்கி நிற்கும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.;

Update: 2019-03-09 22:45 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், அங்கு கட்சி கொடியேற்றி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விளாத்திகுளத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் எனது திருமணத்தை நடத்தி வைத்தது எம்.ஜி.ஆர்.தான். அவரது ஆசிர்வாதம் என்றும் எனக்கு உள்ளது. எனது திருமணத்தின்போது, நான் மருத்துவக்கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். எனது திருமண விழாவில் எம்.ஜி.ஆர். பேசியபோது, தமிழிசை தற்போது மருத்துவம் படித்தாலும், பின்னாளில் சமுதாயத்தில் முக்கியமான அந்தஸ்தில் வருவார். அப்போது அவரது கணவர் சவுந்தரராஜன் குறுக்கே நிற்கக்கூடாது என்று தீர்க்கதரிசனமாக கூறினார். அவரது வாக்கு நிறைவேறியது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது பெயர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சூட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மத்திய அரசு நமது மாநிலத்துக்கு ஏராளமான நல்ல திட்டங்களை வழங்கி உள்ளது.

மருந்து, மாத்திரைகள் வாங்க இயலாமல், எந்த ஏழையும் உயிரிழக்கக்கூடாது என்பதற்காக, மத்திய பா.ஜனதா அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை நிறைவேற்றியது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 50 கோடி ஏழை மக்கள் பயன்பெறுகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொருவரும் ரூ.5 லட்சம் வரையிலும் இலவசமாக உயர்தர சிகிச்சையை பெற முடியும். எனவேதான் நாடு முழுவதும் ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி‘ என்ற பொதுமக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

நாடு முழுவதும் 8 கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 75 லட்சம் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோன்று நாடு முழுவதும் உள்ள 75 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நலன் காக்க பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்துக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார். மதுரையில் ரூ.1,500 கோடியில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தி.மு.க, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, தமிழகத்தில் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க முயற்சி செய்யவில்லை?

மத்தியில் பா.ஜனதாவும், தமிழகத்தில் அ.தி.மு.க.வும் நல்லாட்சியை தொடர வேண்டும். மத்தியில் தாமரை மலர வேண்டும். தாமரைக்கு வட்ட இலையும் தேவை, இரட்டை இலையும் தேவை. தாமரை மலரை தாங்கி நிற்கும் இரட்டை இலைக்கு தமிழகத்தில் வாக்கு அளியுங்கள்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

பின்னர் அவர், குளத்தூர், புளியங்குளம், புதூர் உள்ளிட்ட இடங்களிலும் கட்சி கொடியேற்றி பேசினார். மேலும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, பொதுச்செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்