பெண் அடிமைத்தனம் நீங்க ஆணாதிக்க மனநிலை மாற வேண்டும் பழ.நெடுமாறன் பேச்சு

நாட்டில் பெண் அடிமைத்தனம் நீங்க, ஆணாதிக்க மனநிலை மாற வேண்டும் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.;

Update:2019-03-10 04:30 IST
திருச்சி,

தமிழ்நாடு முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி ‘பெண்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் அளிக்காத சமூகம் ஒருக்காலும் முன்னேற முடியாது’ என்ற தலைப்பில் கருத்தரங்கு திருச்சியில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு சங்க தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அங்கயற்கண்ணி தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த சிலர் எதிர்க்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாட்டில் பல்வேறு துறைகளில் பெண் அடிமைத்தனம் நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆணாதிக்க சமுதாயத்தினர் பெண்களை முடக்கி வைக்க முயற்சிக்கின்றனர். சாதி, மத செயல்கள் மூலம் ஆணாதிக்க வெறியை நிலைநாட்டுகின்றனர். படித்த பெண்களுக்கே இப்படி இருக்கையில் சாதாரண ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலைகளை நினைத்து பார்க்க முடியாது. பெண் அடிமைத்தனம் நீங்க ஆணாதிக்க மனநிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசுகையில், ‘‘பெண்களின் முன்னேற்றத்திற்கான தடை நீடித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் 64 சதவீதம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இந்த நிலை மாற, பெண்களை ஆண்கள் சமமாக கருத வேண்டும்’’ என்றார்.

கருத்தரங்கில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கவிஞர் நந்தலாலா உள்பட பெண் வக்கீல்கள், பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வக்கீல் பாரதி வரவேற்று பேசினார். முடிவில் வளர்மதி நன்றி கூறினார். கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் மணிமேகலைக்கு சிறந்த மகளிருக்கான விருது வழங்கப்பட்டது.


உலக மகளிர் தினமான மார்ச் 8–ந்தேதியை சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறையாக அரசு அறிவித்து அதனை கடைப்பிடிக்க அரசாணை வெளியிடப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண்களை வேட்பாளர்களாக அரசியல் கட்சியினர் அறிவிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நிர்பயா நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்