கூடலூரில் ஆறுகள் வறண்டன விவசாயம் பாதிப்பு

கூடலூரில் ஆறுகள் வறண்டதால், விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-03-09 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு என ஆண்டுக்கு 6 மாதங்கள் மழை பெய்வது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் கூடலூர் ஓவேலியில் இருந்து பல கிளை ஆறுகள் உருவாகி குண்டம்புழா, பாண்டியாறு வழியாக கேரளாவுக்கு பாய்கிறது. இதேபோல் நடுவட்டம், கூடலூர் பகுதியில் இருந்து முதுமலை மாயார் வழியாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் செல்கிறது.

பந்தலுர் தாலுகா பகுதியில் பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளும், பல கிளை ஆறுகளும் பாய்கிறது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் கூடலூர் பகுதியில் தற்போது வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் தாக்கத்தால் அனைத்து ஆறுகளும் வறண்டு விட்டன.

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி கம்மாத்தி அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதனால் அணையில் இருந்து வெளியேறக்கூடிய கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரின்றி காய்ந்து வருகிறது.

கூடலூர் பகுதியில் பாயக்கூடிய ஆறுகளின் குறுக்கே அதிகளவு தடுப்பணைகள் கட்டப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் தண்ணீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடால் வனவிலங்குகளும் ஊருக்குள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் வனவிலங்கு- மனித மோதல்கள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. மழைக்காலத்தில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை தேக்கி வைக்க போதிய தடுப்பணைகள் கூடலூர் பகுதியில் அமைக்கப்படவில்லை.

இதனால் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகள் பாதித்து விடுகிறது. இனிவரும் காலத்தில் கூடுதல் தடுப்பணைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்