மதுரை சிறையில் மகளிர் தினவிழா: கைதிகளுக்கான போட்டிகளில் பரிசு வென்ற பேராசிரியை நிர்மலாதேவி

மதுரை பெண்கள் சிறையில் மகளிர் தினவிழாவையொட்டி பெண் கைதிகளுக்கு நடந்த போட்டியில் பேராசிரியை நிர்மலாதேவி பங்கேற்று பரிசுகள் வென்றார்.

Update: 2019-03-08 23:28 GMT

மதுரை,

மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி போராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மதுரை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல மாதங்களாக சிறையில் இருக்கும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில், சிறைகளில் உள்ள பெண் கைதிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மகளிர் தின விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, மதுரை மத்திய பெண்கள் சிறையில் உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமை தாங்கினார். சிறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், பெண் கைதிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பேச்சு, கட்டுரை, கோலப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

அதில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார். பேச்சு போட்டி, கும்மிப்பாட்டு போட்டியில் முதல் இடம் பெற்றார். அவருக்கு சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா பரிசுகளை வழங்கினார்.

ஜாமீன் கிடைக்காத நிலையில் நிர்மலாதேவி மனநெருக்கடிக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று நினைத்திருந்த நிலையில், அவர் உற்சாகத்துடன் போட்டியில் கலந்துகொண்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்