நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் மாரியப்பன் கென்னடி பேச்சு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்று மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி பேசினார்.

Update: 2019-03-08 23:15 GMT

மானாமதுரை,

மானாமதுரையில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்தது. விழாவிற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உமாதேவன், முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி, அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி, மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:– நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அனைத்திலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அதே கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றனர். அவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள். நான் எம்.எல்.ஏ.வாக இருந்த தருணத்தில் மானாமதுரை தொகுதிக்கு என்னால் முடிந்த அளவு நல்லது செய்து உள்ளேன். இந்த ஆட்சியை காப்பற்றியது நாங்கள் தான்.

ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்து ஓட்டு போட்டவர் ஓ.பி.எஸ். ஆனால் பதவி போனது எங்களுக்கு தான். மாவட்ட செயலாளர் செந்தில்நாதனிடம் கூறியதை ஓ.பி.எஸ். மறக்காமல் நினைத்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து தியானம் இருந்து ஆட்சியை கவிழ்க்க பார்த்தார், நாங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்–அமைச்சராக்கினோம். ஜெயலலிதாவுடன் யாரும் நேருக்கு நேர் நின்று பேச முடியாது. சசிகலா, தினகரன் மூலம் தான் பேச முடியும். தினகரன் மூலம் பதவிக்கு வந்தவர் தான் ஓபிஎஸ். இப்போதும் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவாகத்தான் அ.ம.மு.க.வை நடத்தி வருகிறோம்.

உண்மையான அ.தி.மு.க.வினர் எங்கள் பக்கம் தான் உள்ளனர். விரைவில் அ.தி.மு.க., இரட்டைஇலையை மீட்டெடுப்போம். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிலும் அமோக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி கலந்து கொண்டு பேசிகையில், காரைக்குடி பொதுக்கூட்டத்தில் நான் பேசியதற்கு வழக்கு போட்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் என்னை நீக்கும் முடிவிற்கு நீங்கள் கையெழுத்து போட்டால், அதுதான் நீங்கள் போடும் கடைசி கையெழுத்தாக இருக்கும் என்றேன். இது தவறு என்றால் சிவகங்கை, காளையார்கோவில் என அனைத்து கூட்டத்திலும் இதையே பேசுவேன். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2 ஆயிரம் ஓட்டு கூட இல்லாத பா.ஜ.க. உடன் கூட்டணி ஏன் என்றார். நிகழ்ச்சியையொட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாரியப்பன் கென்னடி வழங்கினார்.

மேலும் செய்திகள்