தனியார் நிறுவனத்தில் இருந்து ஏரியில் கலக்கும் கழிவுநீரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி அருகே தனியார் நிறுவனத்தில் இருந்து ஏரியில் கலக்கும் கழிவுநீரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.;
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி எழில்முகநகர் மற்றும் ஜவஹர்நகர் செல்லும் துழைவுவாயில் அருகே உள்ள சிறிய ஏரி குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. நாவலூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று குழாய் புதைத்து கழிவுநீரை இந்த ஏரியில் விட்டு வந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டி அந்த பகுதியில் கூடினர். இது குறித்து தகவலறிந்த சோழிங்கநல்லூர் 15–வது மண்டல மாநகராட்சி உதவிசெயற்பொறியாளர் ராஜ், துப்புரவு ஆய்வாளர் மூர்த்தி, சுகாதாரஆய்வாளர் கனகவள்ளி, சோழிங்கநல்லூர் வருவாய்துறை ஆய்வாளர் அய்யப்பன், மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
அந்த நிறுவனம் கழிவு நீரை ஏரியில் விடுவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்து குழாயை அடைந்து ஏரியில் கலக்கும் கழிவுநீரை தடுத்து நிறுத்தினர். அப்போது நாவலூர் ஊராட்சி சுகாதாரதுறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நாவலூர் ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.