மாங்காடு அருகே அரிவாளால் வெட்டப்பட்ட கார் டிரைவர் சாவு; 2 பேர் கைது ஆள்மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டது அம்பலம்
மாங்காடு அருகே, அரிவாளால் வெட்டப்பட்ட கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்காக மாற்றிய போலீசார், 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
பூந்தமல்லி,
சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கொளப்பாக்கம், காந்தி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது 21). கார் டிரைவரான இவர், கடந்த 2–ந்தேதி இரவு அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மொபட்டில் வந்த 2 பேர், தினேசை கத்தியால் சரமாரியாக வெட்டிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தினேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து போரூர் உதவி கமிஷனர் செம்பேடுபாபு தலைமையில் மாங்காடு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தினேஷ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கமாக மாற்றி வழக்குப்பதிவு செய்த மாங்காடு போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேகப்படும்படியாக சென்ற மொபட்டின் பதிவெண்ணை வைத்து நெற்குன்றத்தை சேர்ந்த பிரசன்ன நாத்(19), உதயசந்தர்(22) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், கார் டிரைவர் தினேசை வெட்டிக்கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பிரசன்ன நாத்தின் உறவினர் வீடு கொளப்பாக்கத்தில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த தியாகு என்பவர் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்து வந்தார். இதனால் தியாகுவிற்கும், பிரசன்ன நாத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று தியாகுவை கொலை செய்யும் முடிவுடன் பிரசன்னநாத், உதயசந்தர் இருவரும் மொபட்டில் கொளப்பாக்கம் வந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த தினேஷ், அவர்களை வழிமறித்து நீங்கள் யார்?, இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தினேசுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த உதயசந்தர், இவர்தான் நாம் கொலை செய்ய வந்த தியாகு என நினைத்து, கத்தியால் தினேசின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆளை மாற்றி வெட்டி விட்டதால் அதிர்ச்சி அடைந்த பிரசன்னநாத், உதயசந்தருடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான 2 பேரிடம் இருந்தும் ஒரு மொபட், கத்தியை பறிமுதல் செய்தனர்.