மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்கிய பெண்கள் 175 பயணிகளுடன் சென்றனர்

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்லிக்கு 175 பயணிகளுடன் சென்ற விமானத்தை முழுக்க முழுக்க பெண்களே இயக்கினர்.

Update: 2019-03-08 23:00 GMT

ஆலந்தூர்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் 52 விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்குவார்கள் என அறிவித்து இருந்தது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 6.20 மணிக்கு 175 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை விமானி கேப்டன் தீபா தலைமையில் முதன்மை அதிகாரி விருந்தா நாயர், பணிப்பெண்கள் அஞ்சு லட்சுமி, ஷாலினி, சைரியா, அலீஸ், வர்கிந்தா ஆகியோர் கொண்ட குழு இயக்கியது.

இந்த குழுவினர் டெல்லியில் இருந்து மீண்டும் சென்னைக்கு 162 பயணிகளுடன் பகல் 1 மணிக்கு திரும்பி வந்தனர். விமானத்தில் ஏற வந்த பெண் பயணிகளுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக டெல்லி விமானத்தை இயக்கிய விமானி கேப்டன் தீபா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நான் கடந்த 11 ஆண்டுகளாக விமானத்தை இயக்கி வருகிறேன். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் குழுவினருடன் விமானத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பெண்கள் திறமையுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்’’ என்றார்.

மேலும் செய்திகள்