நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாவட்ட கலெக்டர் அருண் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் அருண் கூறினார்.;
புதுச்சேரி,
புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்த மாவட்ட தேர்தல் அலுவலகம் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 25 தொகுதிகளில் (மாகி, ஏனாம் உள்பட) உள்ள வாக்காளர்களுக்கு ஏதுவாக 806 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் செலவின கண்காணிப்பு, போக்குவரத்து, தேர்தல் விழிப்புணர்வு, சட்டம்–ஒழுங்கு பணிகள், மாவட்ட தகவல் மையம் போன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் பணியாற்ற 14 முக்கிய அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 33 பறக்கும் படைகளும், மாநில எல்லையில் 10 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
தொகுதி வாரியாக தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க 102 பகுதி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளன்று 3,803 அரசு பணியாளர்கள்(காவல்துறை நீங்கலாக) வாக்குச்சாவடி அதிகாரிகளாக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து முதல்கட்ட பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் தொடர்பான தகவல்களுக்கும், புகார்களுக்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதுவரை இந்த எண்ணுக்கு 2,180 பேர் தொடர்பு கொண்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவிஜில் (cVIGIL) என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். பேனர், கட்–அவுட்டுகள் வைத்திருப்போர் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் 218 பேரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தேர்தலை சுமுகமாக நடத்தவும், சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் விதமாகவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் மூலம் கண்காணித்தும், தேவைப்படுவோர் மீது 144, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தும் வருகிறோம். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுவைக்கு வர உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, பயிற்சி கலெக்டர் பிரணிமல் அபிஷேக் ஆகியோர் உடனிருந்தனர்.