அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் எதிர்காலம் அழிந்து விடும் - வைகோ பேச்சு
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் எதிர்காலம் அழிந்து விடும் என்று வைகோ பேசினார்.
திருச்சி,
ம.தி.மு.க. மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினவிழா நேற்று திருச்சியில் நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கினார். மல்லிகா தயாளன் வரவேற்றார்.
இந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆண்டுக்கு 10 லட்சம் சிறுமிகள் பாலியல் கொடுமையால் கொல்லப்படுகிறார்கள், 4 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி தெரியவந்து உள்ளது. பெண் குழந்தைகள் தெருவில் நடமாட முடியவில்லை, ஆனால் நாம் மகளிர் தினவிழா கொண்டாடுகிறோம். ஈழத்தில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். அவர்களது கணவன்மார்கள் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். யாழ்ப்பாணத்தில் சிங்களர்களை குடியமர்த்தி ஈழத்தமிழர்களை கலாசார ரீதியாக அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மனிதாபிமானமற்ற அரசு உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாத பிரதமர் மோடி இப்போது ஓட்டு கேட்பதற்காக வந்து பேசுகிறார்.
தமிழகத்தின் வளமான காவிரி பாசன பகுதியை அழிக்கவேண்டும் என்பதற்காக மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு திட்டம் வகுத்து கொடுத்தவர் மோடி. மேகதாதுவில் அணை கட்டி முடிக்கப்பட்டால் தமிழகம் எத்தியோப்பியா போல் பஞ்ச பிரதேசமாக மாறிவிடும். பெரியார், காமராஜரால் கொண்டு வரப்பட்ட சமூக நீதி கொள்கைக்கு மோடி கொள்ளி வைக்கிறார். பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் எதிர்காலம் அழிந்து விடும். அதனை முறியடிப்பதற்கான பிரசாரத்தை நான் தொடங்கி விட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும், இதனுடன் சேர்த்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அதிலும் வெற்றி பெறுவோம். ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பணபலம் இவற்றுக்கு எல்லாம் எதிராக தி.மு.க. தலைமையிலான அணிக்கு ஆதரவு அலைவீசுகிறது. இந்திய உப கண்டத்தில் மத சார்பின்மை பாதுகாக்கப்படவேண்டும், மத, இன ஒருமைப்பாடு காக்கப்படவேண்டும் என்பதற்காக மோடி எதிர்ப்பு அலைவீசுகிறது.
அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடையும். அந்த அணிக்கு 130 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநில கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமையும். அந்த அரசு இந்திய நாட்டின் எல்லையை காப்பதோடு, எல்லை தாண்டி வருகிற பயங்கரவாதத்தையும் கருவறுக்கும். துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டு இருப்பது விபரீதத்தை ஏற்படுத்திவிடும். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார். ம.தி.மு.க. பொருளாளர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெண்ணுரிமை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. விழா மேடையில் பிரபாகரன் தாயார் பார்வதி, வைகோ தாயார் மாரியம்மாள் படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.