கொடுமுடி அருகே ரோட்டோர பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் விழுந்து விவசாயி பலி மனைவி– 2 மகன்கள் காயம்
கொடுமுடி அருகே ரோட்டோர பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் விழுந்து விவசாயி இறந்தார். இந்த விபத்தில் அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் காயம் அடைந்தனர்.
கொடுமுடி,
கொடுமுடி அருகே உள்ள வளந்தான்கோட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி செல்வி (40). இவர்களுடைய மகன்கள் கார்த்திக் (19), சரவணன் (18).
நேற்று முன்தினம் இரவு விஸ்வநாதன், செல்வி ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளும், கார்த்திக், சரவணன் ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளிலும் கொடுமுடியில் இருந்து வளந்தான்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இச்சிப்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரிக்கு இடம் கொடுப்பதற்காக ரோட்டை விட்டு விஸ்வநாதன் தன்னுடைய மோட்டார்சைக்கிளை இறக்கி உள்ளார். அப்போது நிலைதடுமாறி ரோட்டோர பள்ளத்தில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்தார். இதேபோல் அவருக்கு பின்னால் வந்த அவருடைய மகன்களின் மோட்டார்சைக்கிளும் அதே பள்ளத்தில் விழுந்தது.
இதில் 4 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேரையும், அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்திலேயே விஸ்வநாதன் இறந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.