கோவில் விழாவில் அருள்வாக்கு கூறியபோது 20 அடி உயர கம்பத்தில் இருந்து தவறி விழுந்து பூசாரி சாவு , வாட்ஸ்-அப்பில் வீடியோ காட்சி பரவுகிறது
பேரூர் அருகே கோவில் விழாவில் அருள்வாக்கு கூறியபோது 20 அடி உயர கம்பத்தில் இருந்து தவறி விழுந்த பூசாரி பரிதாபமாக இறந்தார். இதன் வீடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவுகிறது.
கோவை,
கோவை மாவட்டம் பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யாசாமி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் அய்யாசாமி (வயது 33) என்பவர் பூசாரியாக பணியாற்றி வந்தார்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தன்று இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது நள்ளிரவில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயர கம்பத்தின் மீது அமர்ந்து அய்யாசாமி அருள்வாக்கு கூறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூஜை செய்யப்பட்ட கம்பத்தின் மீது ஏறி படுத்துக்கொண்டு ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு பூசாரி அய்யாசாமி அருள்வாக்கு கூறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி 20 அடி உயர கம்பத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அய்யாசாமியை அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இறந்துபோன அய்யாசாமிக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பூசாரி அய்யாசாமி 20 அடி உயர கம்பத்தில் இருந்து தவறி விழும் வீடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே அய்யாசாமி இறந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்காமலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேரூர் போலீசார் கூறுகையில், பூசாரி அய்யாசாமி 20 அடி உயர கம்பத்தில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை, வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.