கோவில்பட்டியில் ரூ.50 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

கோவில்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.;

Update: 2019-03-08 22:15 GMT
கோவில்பட்டி, 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தபால் துறையின் சார்பில், சேமிப்பு கணக்குகள், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்குகள், ஆயுள் காப்பீடுகள் போன்றவை சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து 400 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.250 செலுத்தி செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைத்தார். அதற்கான சேமிப்பு கணக்கு புத்தகம் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.

முன்னதாக கழுகுமலை பாபாநகர், குமாரபுரம் ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர், கழுகுமலை தியாகி வெங்கடாசலபுரம் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு, கழுகுமலை அருகே கே.வள்ளிநாயகபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (அதாவது நேற்று) முதல் கோவில்பட்டியில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் 400 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.250 வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் செலுத்தி, தபால் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைத்துள்ளேன். அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மாதந்தோறும் தங்களால் இயன்ற அளவு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணத்தை செலுத்தினால், அந்த குழந்தைகள் 21 வயதை அடையும்போது கணிசமான அளவு நிதி கிடைக்கும். இதனை அந்த குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.

தென் மாவட்டங்களில் நெல்லைக்கு அடுத்தபடியாக, கோவில்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேம்படும். கோவில்பட்டியில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து, வருகிற 11-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது. கோவில்பட்டியில் அறிவியல் பூங்கா அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வின் கூட்டணியும் இன்னும் முடித்துக் கொள்ளப்படவில்லை. தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணியின் இறுதி வடிவம் குறித்து அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்