உதவித்தொகை வாங்கி தருவதாக மூதாட்டியிடம் 3½ பவுன் நகை ‘அபேஸ்’ மர்மஆசாமிக்கு வலைவீச்சு

மார்த்தாண்டத்தில் அரசின் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-08 22:30 GMT
குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே கொடுங்குளத்தை சேர்ந்தவர் பகவதி (வயது 74). கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை இவர், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குதற்காக மார்த்தாண்டத்துக்கு வந்தார். பின்னர், மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, டிப்-டாப்பாக உடை அணிந்து ஒரு ஆசாமி அங்கு வந்தார். பின்னர் அவர், மூதாட்டியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அவரை நம்பிய பகவதி தனது குடும்ப நிலை பற்றி கூறினார்.

மேலும், தனது ஏழ்மை நிலையை எடுத்துக் கூறிய அவர், எவ்வளவோ முயற்சி செய்தும் அரசின் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று புலம்பியுள்ளார்.

அப்போது, பகவதியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை கண்ட ஆசாமி, தன்னால் முதியோர் உதவித்தொகையை வாங்கித்தர முடியும் என்று அவரிடம் நம்பிக்கையான வார்த்தைகளை கூறினார்.

மேலும், நகைகள் அணிந்தவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காது என்றும், அதை கழற்றி தருமாறு கேட்டார். உதவித்தொகை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் சற்றும் யோசிக்காமல் பகவதி, 3½ பவுன் நகையை கழற்றி கொடுத்தார். சங்கிலி கிடைத்ததும் மர்ம ஆசாமி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பகவதி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், இதுகுறித்து பகவதி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்