வந்தவாசி அருகே தண்ணீர் பிடிப்பதில் தகராறு; கீழே தள்ளியதில் மூதாட்டி சாவு பெண் கைது

வந்தவாசி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பெண்ணை கைது செய்தனர்.

Update: 2019-03-08 23:15 GMT

வந்தவாசி,

வந்தவாசி அருகே விளாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவன். இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 75). இவர் கடந்த 6–ந் தேதி வீட்டின் அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கைப்பம்பில் குடிநீர் பிடிக்கச் சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி லைலா (55) குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த குடத்தை தள்ளிவிட்டு தண்ணீர் பிடிக்க ராஜம்மாள் முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த லைலா, ராஜம்மாளை கீழே தள்ளினார். கீழே விழுந்த ராஜம்மாள் மீண்டும் எழுந்திருக்கவில்லை. அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராஜம்மாள் அதே இடத்தில் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜம்மாளின் மகன் முருகன் நேற்று முன்தினம் வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று லைலாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்