ஆலங்குளம் அருகே வீடு புகுந்து துணிகரம், ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 20 பவுன் நகை பறிப்பு

ஆலங்குளம் அருகே நேற்று வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் உறவினர்கள் என கூறி 20 பவுன் நகைகளை பறித்து சென்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-07 23:00 GMT
ஆலங்குளம், 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிபட்டி நல்லூரில் சிவலார்குளம் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி ரோஸ்லி (வயது 80). இவர் பள்ளிக்கூடம் ஒன்றில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் வில்சன். இவர் நல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக உள்ளார்.

நேற்று காலையில் வில்சனும், அவருடைய மனைவியும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர். வீட்டில் ரோஸ்லி தனியாக இருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 3 மர்ம நபர்கள் ரோஸ்லி வீட்டுக்குள் சென்றனர். தங்களை உறவினர்கள் என அறிமுகம் செய்து கொண்டு, 3 பேரும் ரோஸ்லியிடம் பேச்சு கொடுத்தனர். அந்த பெண், ரோஸ்லியின் கால்களை பிடித்து விட்டு உதவுவது போல் நடித்து உள்ளார்.

சிறிது நேரத்தில் துணியால் 3 பேரும் அவருடைய முகத்தை மூடி இறுக்கி கட்டி உள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை பறித்து கொண்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய ரோஸ்லி சிறிது நேரத்தில் சுதாரித்து எழுந்து துணியை கழற்றி வெளியே ஓடிச்சென்று கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால், மர்மநபர்கள் 3 பேரும் அதற்குள் அங்கிருந்து தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளை குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல்கட்டமாக, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்தனர். அதில் மர்மநபர்கள் 3 பேரும் ரோஸ்லியிடம் நகைகளை பறித்து கொண்டு ரோட்டில் ஓடுவது பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை கொண்டு ரோஸ்லியிடம் நகைகளை பறித்துச்சென்ற பெண் உள்பட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள நல்லூர் சிவலார்குளம் ரோட்டிலுள்ள வீட்டில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்