பாளையங்கோட்டையில் கார் நிறுவனத்தில் பணம் மோசடி செய்த விற்பனை பிரதிநிதி கைது
பாளையங்கோட்டையில் கார் நிறுவனத்தில் பணம் மோசடி செய்த விற்பனை பிரதிநிதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் ஒரு தனியார் கார் நிறுவனம் உள்ளது. இந்த கார் நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த பொன்ராஜ் வேதகுமார் (வயது 35) என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தில் கார் வாங்குபவர்கள் முன்பணம் செலுத்துவது வழக்கம். புதிய காரை எடுக்கும் போது மீதி தொகையை செலுத்துவார்கள்.
பொன்ராஜ் வேதகுமார் சில வாடிக்கையாளர்களிடம் முன்பணம் வாங்கி உள்ளார். அந்த பணத்தை அவர் நிறுவனத்தில் செலுத்தவில்லை என்றும், ரூ.1.20 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பொன்ராஜ் வேதகுமார் திடீரென்று தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து அந்த கார் நிறுவனத்தில் மேலாளர் சார்பில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பொன்ராஜ் வேதகுமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு பொன்ராஜ் வேதகுமாரை போலீசார் கைது செய்தனர்.