ராணுவ ஆவணங்கள் திருட்டு போன நிலையில் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி எழுந்துள்ளது சரத்பவார் குற்றச்சாட்டு

ராணுவ அமைச்சகத்தில் இருந்து ஆவணங்கள் திருட்டு போன நிலையில் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி எழுந்துள்ளது என்று சரத்பவார் குற்றம்சாட்டினார்.;

Update: 2019-03-07 23:00 GMT
மும்பை, 

ராணுவ அமைச்சகத்தில் இருந்து ஆவணங்கள் திருட்டு போன நிலையில் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி எழுந்துள்ளது என்று சரத்பவார் குற்றம்சாட்டினார்.

தொண்டர்களுடன் உரையாடல்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பான வழங்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று கட்சி தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

முக்கிய ஆவணங்கள்

நாட்டின் ராணுவ அமைச்சகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருட்டு போய் உள்ளன. இவ்வாறு ஆணவங்கள் திருட்டு போன நிலையில் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி எழுந்து உள்ளது.

ரபேல் ஒப்பந்தம் சிலரின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இல்லாவிடில் இந்த அரசாங்கம் ஏன் நாடாளுமன்றத்தில் திருட்டை மறைக்க முயற்சி செய்கிறது. அந்த ஆவணங்களில் நிச்சயம் சில முக்கிய தகவல்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

ரபேல் தொடர்பான வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவிக்கும் சிலர், போபர்ஸ் வழக்கில் விசாரணை கோருகின்றனர். இது ஆச்சரியமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி அரசியலாக்குகிறார்

மேலும் புலவாமா தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதுஉள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர் பேசியதாவது:-

விமானப்படை தாக்குதலைபிரதமர் நரேந்திர மோடி அரசியலாக்க விரும்புகிறார். இது மிகவும் சோகமானது. வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்கள் கூட அரசியலாக்கப்படுவதை விரும்பவில்லை. இந்தியா அமைதியையும், அனைத்து அண்டை நாட்டுடனும் நட்புறவையும் விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானின் விருப்பம் வேறு மாதிரியாக உள்ளது.

விவசாயிகள் தற்கொலை

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 15 லட்சம் மக்கள் வேலையை இழந்தனர். ஆனால் மக்களின் கஷ்டங்களுக்கு நடுவே இதன்மூலம் எவ்வளவு கருப்புபணம் மீட்கப்பட்டது என்பது தெரியவில்லை.

கடந்த 2½ ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்