நாடாளுமன்றத்துடன் சட்டசபைக்கு தேர்தல் இல்லை முதல்-மந்திரி பட்னாவிஸ் திட்டவட்டம்
நாடாளுமன்றத்துடன் சட்டசபைக்கு தேர்தல் இல்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக கூறினார்.
நாக்பூர்,
நாடாளுமன்றத்துடன் சட்டசபைக்கு தேர்தல் இல்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக கூறினார்.
சட்டசபை தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மராட்டிய சட்டசபைக்கும் தேர்தலை நடத்த பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதற்கு வசதியாக சட்டசபை கலைக்கப்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.
ஆனால் இதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அவ்வப்போது மறுத்தாலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்பட்டது.
அசோக் சவான் கருத்து
இந்த நிலையில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் கூறுகையில், “தனது சொந்த பலத்தில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் இல்லை.
எனவே புலவாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பு நடந்த நிகழ்வுகளை வைத்து அவர் அரசியல் லாபம் தேட விரும்புகிறார். இதனால் அவர் முன்கூட்டியே சட்டசபையை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளார்” என்றார்.
முதல்-மந்திரி திட்டவட்டம்
இந்த நிலையில் நேற்று நாக்பூரில் 13.5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாப்ரி- சிதபுருதி இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கு தேர்தலை நடத்தும் வகையில் சட்டசபை கலைக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
மராட்டியத்தில் அப்படி நடக்க எந்த வாய்ப்பும் இல்லை. நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பதவிக்காலம் முடியும்வரை எக்காரணம் கொண்டும் சட்டசபை கலைக்கப்படாது. அதுமட்டும் இல்லாமல் முன்கூட்டியே சட்டசபைக்கு தேர்தல் நடக்கவும் வாய்ப்பில்லை. சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் இறுதி வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.