நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறும் ஷோபா எம்.பி. சொல்கிறார்

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஷோபா எம்.பி. கூறினார்.

Update: 2019-03-07 22:30 GMT
பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஷோபா எம்.பி. கூறினார்.

உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் செய்துள்ள சாதனைகள் குறித்து ஷோபா எம்.பி. நேற்று பெங்களூரு புத்தகங்கள் வெளியிட்டார். இந்த விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குரட்டை விடுகிறார்கள்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்து 9 மாதங்கள் ஆகிறது. ஆனால் இந்த கூட்டணி கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதிகாரிகள் குரட்டை விடுகிறார்கள். மாநில அரசு தூக்கத்தில் இருக்கிறது.

வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை இந்த அரசு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம், இலாகா பங்கீடு ஆகியவற்றிலேயே இந்த அரசு காலத்தை கழித்துள்ளது.

ரூ.71 ஆயிரம் கோடி நிதி

அதனால் மத்திய அரசை குறை சொல்லும் உரிமை கூட்டணி அரசுக்கு இல்லை. கிராமப்புற வேலை உறுதி திட்டம், இயற்கை பேரிடர் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை, கூட்டணி அரசு வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு, அனைத்து உதவிகளையும் கர்நாடகத்திற்கு செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கர்நாடகத்திற்கு ரூ.71 ஆயிரம் கோடி நிதி உதவி கிடைத்தது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் கோடி நிதி கர்நாடகத்திற்கு கிடைத்துள்ளது.

திப்பு சுல்தான்

ரெயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்டம், கழிவறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி, ஜந்தகல் கனிம சுரங்க நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் கோர்ட்டின் நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.

கோர்ட்டின் உத்தரவையும் மதிக்காமல் அவர் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். அத்தகையவர் பிரதமர் மோடியை பற்றி குறை சொல்கிறார். நெற்றியில் திலகமிட்டால் பயம் உண்டாகிறது என்று சித்தராமையா கூறி இருக்கிறார். திப்பு சுல்தான் பக்தர்களை ஈர்க்க அவர் இவ்வாறு கூறி இருப்பார் என்று நான் கருதுகிறேன்.

திறம்பட நிறைவேற்றுவேன்

இந்த அளவுக்கு மிக மோசமான அரசியல் செய்யும் சித்தராமையாவுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட பா.ஜனதாவில் அதிகம் பேர் இருக்கிறார்கள். அதனால் சிலர் எனக்கு எதிராக சமூகவலைதளத்தில் தவறான தகவலை பரப்பி இருப்பார்கள்.

எனக்கு எந்த தொகுதியில் டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். நான் கட்சியின் சாதாரண தொண்டராக பணியாற்றுகிறேன். கட்சி என்ன பொறுப்பு வழங்குகிறதோ, அதை திறம்பட நிறைவேற்றுவேன்.

போட்டியிட தயார்

உடுப்பி-சிக்கமகளூருவில் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், எங்கள் கட்சி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் அதே தொகுதியில் எனக்கு வாய்ப்பு வழங்கினால் நான் போட்டியிட தயாராக உள்ளேன்.

2014-ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு பா.ஜனதா என்ன வாக்குறுதிகளை அளித்ததோ அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளோம். நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி ஒரு கரும்புள்ளி கூட இல்லாமல் ஆட்சியை நடத்தி இருக்கிறார்.

22 தொகுதிகளில் வெற்றி

இந்த முறை 300-க்கும் அதிகமான தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு ஷோபா கூறினார்.

மேலும் செய்திகள்