கொள்கை இல்லாத அ.தி.மு.க. கூட்டணியை புறக்கணிக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி

கொள்கை இல்லாத அ.தி.மு.க. கூட்டணியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.;

Update: 2019-03-07 23:00 GMT
நாகர்கோவில்,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் பிரசாரத்தை தொடங்கும் இடத்தை தேர்வு செய்வது தொடர்பாகவும், முன்னேற்பாடு குறித்தும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மயூரா ஜெயக்குமார், மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, காங்கிரஸ் நிர்வாகிகள் பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் பொன் ராபர்ட்சிங், நகர தலைவர் அலெக்ஸ், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தென்மண்டல தலைவர் ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வைகோ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். சென்னையில் பேசிய பிரதமர் மோடி, காமராஜரை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்தியதாக கூறியுள்ளார். காமராஜரை பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், விவசாயிகளுக்கு அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று தினம் தினம் அறிக்கை விடுவார். ஆனால் அவர் மோடியுடன் கூட்டணி வைத்துள்ளார்.

இந்த கூட்டணியை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த கொள்கையும் இல்லாமல் சந்தையில் மாட்டை விலை பேசுவது போன்றுதான் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களிடம் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண் டும். கொள்கை இல்லாத அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டியது இளைஞர்களின் கடமை. ஆனால் நம் கூட்டணி கொள்கை ரீதியிலான கூட்டணி.

நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவும், ராகுல்காந்தியும் தான் முடிவு செய்வார்கள். காமராஜர் வெற்றி பெற்ற இந்த மண்ணில் இருந்து சொல்கிறேன். காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைப்போம். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு இல்லை என்பதை காட்டும் விதமாகத்தான் தற்போது அனைவரும் ஒன்றாக வந்துள்ளோம். தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்பது தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் ஏற்றது அல்ல. பா.ஜனதா போன்ற சர்வாதிகார கட்சி இருக்கிற போது ஜனநாயக இயக்கங்கள் ஒன்று சேர வேண்டியது காலத்தின் தேவை. எனவே அந்த தேவையை கருத்தில் கொண்டு தான் இந்தியா முழுவதும் கூட்டணி உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக பொன்ஜெஸ்லி கல்லூரி, ஸ்காட் கல்லூரி, கன்கார்டியா பள்ளி ஆகிய 3 இடங்களுக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

முன்னதாக ஆரல்வாய்மொழிக்கு வந்த கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் செல்வமணி ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்தும், மேள, தாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருமாள்புரத்தில் உள்ள காமராஜ் சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தோவாளை வட்டார கிழக்கு காங்கிரஸ் தலைவர் முருகானந்தம், நகர தலைவர் நேசமணி, செண்பகராமன்புதூர் தலைவர் நீலாமணி, முன்னாள் வட்டார தலைவர் செல்வமணி, தயாபரன், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட மனித உரிமைத்துறை தலைவர் ரவிசங்கர், தமிழக மகிளா காங்கிரஸ் துணை தலைவர் லைலா ரவிசங்கர், மேற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ஸ்டூவர்ட், மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரடி கென்னடி, பத்மநாபபுரம் தொகுதி காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மோகன்தாஸ், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஜின் எலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்