கிளிஞ்சல்மேடு கடல் பகுதியில் ஹோவர் கிராப்ட் கப்பல் இன்று சோதனை ஓட்டம்
கடலிலும் தரையிலும் ரோந்து செல்லக்கூடிய அதிநவீன ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் கிளிஞ்சல்மேடு கடல் பகுதியில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
காரைக்கால்,
கடல் வழியாக மது வகைகள், தங்கம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி தங்கம், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் வழியாக கடத்தப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் காரைக்கால் மீனவ கிராமத்தில் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தரையிலும், கடலிலும் அதிவேகமாக ரோந்து செல்லக் கூடிய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஹோவர் கிராப்ட் எனும் அதிநவீன கப்பல் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கப்பல் கடந்த மாதம் சென்னையில் இருந்து மண்டபம் வரை கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அதனைதொடர்ந்து மண்டபத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி நேற்று காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதிக்கு இந்த கப்பல் வந்தது.
காரைக்கால் கடற்பரப்பில் இந்த கப்பல் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், அதன்பிறகு சென்னை புறப்பட்டுச் செல்கிறது என்று இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.