வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலியானார்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் பாரூர் - செல்லம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மினிவேன் சதீஷ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீசை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள எம்.சவுளூரை சேர்ந்தவர் ரங்கசாமி (60). விவசாயி. சம்பவத்தன்று அவர் மொபட்டில் ஜெகதாப் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரங்கசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் பச்சியப்பன் (41). தனியார் நிறுவன காவலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.