மதுஅருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் போலீஸ் ஏட்டுவின் மண்டை உடைப்பு 4 பேர் கைது
மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் கல்லால் தாக்கி போலீஸ் ஏட்டுவின் மண்டையை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னை புரசைவாக்கம், போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 48). இவர், சென்னை காவல் கட்டுப்பட்டு அறையில் போலீஸ் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள கோவிலுக்கு தனது குடும்பத்துடன் வந்தார்.
பின்னர் நள்ளிரவில் கோவிலுக்கு அருகில் உள்ள கடையில் டீ குடிக்க வந்தார். அப்போது அங்கு சாலையோரம் ஒரு ஆட்டோவில் அமர்ந்து சிலர் மதுஅருந்தியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த ஏட்டு இளங்கோவன், கோவில் அருகே பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் இப்படி மது அருந்துகிறீர்களே? என தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், குடிபோதையில் அங்கிருந்த கல்லை எடுத்து போலீஸ் ஏட்டு இளங்கோவின் தலையில் சரமாரியாக தாக்கினர். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். இதைபார்த்து ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், இளங்கோவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பாஷா (22), புதுப்பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (21), சாந்தகுமார் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.