வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-03-07 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் வேப்பமூடு சந்திப்பு, பூங்கா முன்புறம் மற்றும் கோர்ட்டு ரோட்டின் ஓரம் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10–ம் (2 மணி நேரத்துக்கு மட்டும்), 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.40–ம் வசூலிக்கப்படுகிறது.

சாலையோரத்தில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்கு கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து வேப்பமூடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். ஆனால் கட்டணம் வசூல் செய்யும் முறையை கைவிட முடியாது என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாலை ஓரம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூல் செய்யும் முறையை அமல்படுத்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேப்பமூடு சந்திப்பு முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை பூங்கா முன் சாலையில் நிறுத்தி தங்களது எதிர்ப்பை காட்டினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர்குழு உறுப்பினர் அஜிஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உசேன், குழு உறுப்பினர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும், குடிநீர் மற்றும் சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்