தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-07 23:00 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்களில் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பழனியம்மாள், சரவணன், சிவப்பிரகாசம், யோகராசு, ராமஜெயம், அண்ணாகுபேரன், புகழேந்தி, கவுரன், காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

தேர்தல் பணிக்காக ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றை சேர்ந்த ஊழியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும். ஊழியர்களின் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்