குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை - தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-03-06 22:45 GMT
விழுப்புரம்,

குழந்தை மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர்களை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அபாயகரமான தொழில்களில் குழந்தை தொழிலாளர்களை 18 வயது வரை ஈடுபடுத்தப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அபாயகரமான தொழில்களான தொழிற்சாலைகள், லேத் பட்டறைகள், லாரி மற்றும் பஸ் பாடி பில்டர்ஸ் செய்யப்படும் தொழில்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், வீட்டு வேலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் பணிகளில் குழந்தைகள் மற்றும் 18 வயது நிறைவடையாத வளர்இளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பள்ளி தேர்வுகள் நடைபெற்று விடுமுறை நாட்கள் வர இருப்பதால் குழந்தை தொழிலாளர்கள் யாரையும் பணியில் அமர்த்தக்கூடாது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் 14 வயது வரை குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 18 வயது வரை குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாக உரிய தடுப்புக்குழு அமைக்கப்பட்டு திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் 1098 என்ற இலவச தொலைபேசி அழைப்புக்கு தகவல் அளிக்கலாம். அதுமட்டுமின்றி pencil portal என்ற வலைதளத்திலும் புகார் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்