வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய கோரி அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
கடலூர் நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சிகளில் வீடுகளுக்கு வரி உயர்வை அமல்படுத்தும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். கோண்டூர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் பகலிலும், இரவிலும் நின்று செல்ல வேண்டும். சாவடியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, மாயவேல், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் மனோகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மருதவாணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடர்ந்து மஞ்சக்குப்பம்- குண்டுஉப்பலவாடி சாலைப்பணியை உடனே தொடங்க வேண்டும். பாதிரிக்குப்பத்தில் ஒருங்கிணைந்த வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நிர்வாகிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், காசிநாதன், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, மோகன், ரங்கநாதன், கண்ணன், இளங்கோவன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.