புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நாராயணசாமி ஒப்புதல்

புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதல்–அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2019-03-06 23:15 GMT

புதுச்சேரி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல் புதுவை அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் 9 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் 1–1–2019 முதல் அகவிலைப்படியை 9 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தி அதற்கான ஒப்புதலை முதல்–அமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார்.

இதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அரசு ஊழியர்களின் மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதற்காக புதுச்சேரி அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3.60 கோடி கூடுதலாக செலவாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்