பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது விழுப்புரம் மாவட்டத்தில் 38,188 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வை 38 ஆயிரத்து 188 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

Update: 2019-03-06 23:00 GMT
விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு நேற்று தமிழ் முதல் தாள் தேர்வுடன் தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 296 மாணவ- மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 29 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 76 மாணவ- மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 30 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 60 பேரும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 14 மையங்களில் 3 ஆயிரத்து 914 பேரும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 21 மையங்களில் 5 ஆயிரத்து 820 பேரும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 20 மையங்களில் 6 ஆயிரத்து 22 பேரும் எழுதினர்.

விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் 137 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 878 மாணவர்களும், 20 ஆயிரத்து 310 மாணவிகளும் ஆக மொத்தம் 38 ஆயிரத்து 188 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். இவர்களை தவிர தனித்தேர்வர்கள் 1,973 பேரும் பிளஸ்-1 தேர்வை எழுதினர்.

முன்னதாக காலை 9 மணி முதலே பெரும்பாலான மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தனர். சரியாக 10 மணிக்கு மாணவ- மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து படித்து பார்ப்பதற்காக கூடுதலாக 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

பின்னர் 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் அதில் மாணவ- மாணவிகள் தங்களது பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்பட்டு 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடனும், அதே நேரத்தில் மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதினார்கள்.இத்தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிவடைந்தது.

இந்த தேர்வுப்பணிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் தேர்வில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பார்வையிட்டார்.

அப்போது தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

மேலும் பிளஸ்-1 தேர்வை கண் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடு, மனநலம் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட என மொத்தம் 39 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கு தேர்வை எழுத தனியாக தரைத்தளத்தில் அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அங்கு ஆசிரியர்கள், வினாத்தாளை படித்து பார்த்து கேள்விகளுக்கு பதில் கேட்க மாணவ- மாணவிகள் அதற்குரிய விடைகளை கூறினார்கள். அதை அந்த ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினார்கள். மேலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்கள் 71 பேர் தேர்வு எழுதினர். மற்ற மாணவ-மாணவிகளை காட்டிலும் இவர்கள் 110 பேருக்கும் தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்