சீருடை அணியாமல் வந்ததை கண்டித்த ஆசிரியரை தாக்கிய பிளஸ்-1 மாணவர் கைது

சீருடை அணியாமல் வந்ததை கண்டித்த ஆசிரியரை, தாக்கிய பிளஸ்-1 மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-03-06 22:45 GMT
குமுளி,

குமுளியில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதை பார்த்த ஆசிரியர் ஜெயதேவ் (வயது 40) மாணவரை கண்டித்துள்ளார். சீருடை அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சீருடை அணியாமல் வகுப்பறைக்குள் செல்லக்கூடாது என்று கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஆசிரியர் வந்தபோது மாணவர் வகுப்பறைக்குள் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயதேவ், மாணவரை வகுப்பறையை விட்டு வெளியே செல்லுமாறும், முதல்வரை சந்தித்து விட்டு வருமாறு கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், ஆசிரியரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கட்டப்பனையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குமுளி போலீசில் ஜெயதேவ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரை பள்ளி மாணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்