ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குருராகவேந்தர் முன்னிலை வகித்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் குமரேசன் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.