மாந்தோப்பில் தூங்கியபோது பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சக்கி 3 வயது குழந்தை பலி

திருவள்ளூர் அருகே மாந்தோப்பில் தூங்கிக்கொண்டிருந்தபோது, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2019-03-06 22:30 GMT

திருவள்ளூர்,

விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 28). இவருக்கு மஞ்சுளா (23) என்ற மனைவியும், கரண் (4), யாக்கோப் (3) என 2 மகன்களும் உள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கன்னியம்மன் நகரில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக செல்வம் வேலை பார்த்து வந்தார். அந்த மாந்தோப்பிலேயே அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் தங்கி இருந்தனர். செல்வம், கடந்த சில வருடங்களாக இங்கு வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வம் தனது 3 வயது குழந்தை யாக்கோப்பை மாந்தோப்பின் ஒரு பகுதியில் தூங்கவைத்தார். அந்த குழந்தையின் மீது துணியை போட்டு போர்த்தினார். கணவன் மனைவி இருவரும் மற்றொரு மகனை அழைத்துக்கொண்டு தோப்பை சுற்றி பார்க்க சென்றுவிட்டனர்.

அந்த நேரத்தில் மாந்தோப்புக்குள் டிராக்டர் ஒன்று வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையின் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் குழந்தை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

உடனே டிரைவர், டிராக்டரை விட்டுவிட்டு தப்பியோடி விட்டார். நடந்த சம்பவம் குறித்து செல்வம் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்