நெற்குன்றத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பெண்கள் ஆர்ப்பாட்டம்
நெற்குன்றத்தில், புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கடையை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
சென்னை நெற்குன்றம், அபிராமி நகர் 5–வது தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக அரசு மதுக்கடை திறப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அந்த கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:–
இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. வீடுகளுக்கு அருகே புதிதாக மதுக்கடை திறந்தால், மதுபிரியர்கள் குடித்து விட்டு அந்த வழியாக செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார்கள். குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கும்.
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மெயின்ரோட்டுக்கு சென்று பஸ் ஏறிச்செல்ல இந்த வழியாகத்தான் செல்வார்கள். இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மதுக்கடையை பார்த்து குடிப்பழக்கத்துக்கு ஆளாவார்கள்.
இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் அடித்து நொறுக்குவோம்.
இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை ஏற்று, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.