திருச்சியில் 103 டிகிரியை தாண்டியது: அனல் காற்றுடன் சுட்டெரிக்கும் வெயில்; பொதுமக்கள் கடும் அவதி

அனல்காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்சியில் நேற்று வெயில் அளவு 103 டிகிரியை தாண்டியது.

Update: 2019-03-06 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாட்டின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பஸ், ரெயில் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. மேலும் 24 மணி நேரமும் இயங்கும் சர்வதேச விமான நிலையமும் திருச்சியில்தான் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அதிகமாக இருந்தாலும் பிரசித்தி பெற்ற கோவில்களும் இங்குதான் உள்ளது. பல பெருமைகளை பெற்ற திருச்சிக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான் ‘கந்தக பூமி’. ஏனென்றால், மண்வளம் அப்படி அமைந்துள்ளதால், எப்போதுமே வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும் பூமியாகவே உள்ளது. ஆண்டுதோறும் போதிய மழையும் பெய்வது இல்லை.

இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கும் முன்பே, சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. கூடவே அனல்காற்றும் வேலையை காட்ட தொடங்கி விட்டது. நேற்று திருச்சி மாநகரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பாதசாரிகள் தலையில் முக்காடு போட்டும், குடைகள் பிடித்து கொண்டும் சென்றனர். சிலர், வெயிலை பார்த்த அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். வீடுகளில் ஏ.சி. வசதியுடையவர்கள் பகல் வேளையில் ஏ.சி.யை ஓடவிட்டிருந்தனர்.

மேலும் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல்காற்றும் வீசியதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் பலர் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் கண்கள் மட்டும் தெரியும் அளவுக்கு விட்டு விட்டு, முகம், தலை, கை முழுவதும் துணியால் மறைத்தபடி சென்றதை காணமுடிந்தது. ஆண்கள் ‘ஹெல்மெட்’ அணிந்தது மட்டுமல்லாமல் ‘சன்கிளாஸ்’ மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்தும் மோட்டார் சைக்கிளில் அன்றாட பணிகளுக்கு சென்றனர். குறிப்பாக, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கதர் ஆடைகளையும் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பழ ஜூஸ், ஐஸ் கிரீம், மோர், இளநீர், வெள்ளரிக்காய், நுங்கு போன்றவற்றை உட்கொண்டு உடல் சூட்டை தணித்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் சாலையோர காய்கறி வியாபாரிகள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டும், நிழலுக்காக சாக்குப்பையால் வேயப்பட்ட பந்தல் அமைத்தும், சிலர் குடையின் கீழ் அமர்ந்தும் வியாபாரம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நேற்று முன்தினம் திருச்சியில் 101 டிகிரியை தொட்ட வெயில் அளவு, நேற்று மேலும் 2 டிகிரி அதிகரித்து 103.3 டிகிரியாக பதிவாகி இருந்தது. கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சதத்தை தாண்டி விட்டதால், கோடைகாலம் தொடங்கி விட்டால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்