இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாசில்தார்கள் காத்திருப்பு போராட்டம்
இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாசில்தார்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறப்பு திட்ட பிரிவு மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவில் வருவாய்த்துறையில் பணிபுரிந்த 32 தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்வது தங்களை பாதிக்கும் எனவும், இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் குமாரராஜா தலைமை தாங்கினார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் குமாரராஜா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த 32 தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் பணிபுரிந்து வந்த தாசில்தார்கள் இடமாற்றத்துக்கான உத்தரவு நகலை பெற்றுக்கொண்டு, தங்களை வட்ட தாசில்தார் பணியில் இருந்து விடுவித்துக்கொண்டார்கள். தற்போது மற்ற தாசில்தார்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எங்களது மாநில சங்க நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து பிரச்சினைகளை எடுத்து கூற உள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் மட்டும் தான் தேர்தல் பணியை சிறப்பாக செய்ய முடியும். இரவு, பகல் என பார்க்காமல் பணியை மேற்கொண்டால் மட்டுமே தேர்தல் நன்றாக நடைபெறும். நீலகிரியில் தற்போது 9 தாசில்தார்கள், 24 துணை தாசில்தார்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாலும், அதற்கு பதிலாக பணி நியமனம் செய்யப்படாததாலும் மாவட்டத்தில் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, தேர்தல் ஆணையம் வருவாய்த்துறை அதிகாரிகளின் பிரச்சினையை புரிந்து கொண்டு, வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. இன்று (நேற்று) தமிழகம் முழுவதும் தாலுகா, வருவாய் கோட்டாட்சியர், கலெக்டர் அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார்கள் பணி செய்யாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் நேற்று தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.