வெவ்வேறு விபத்துகளில் தச்சு தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் தச்சு தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சதானந்தம் (வயது 47). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தர்மபுரி - காவேரிப்பட்டணம் தேசிய நெடுஞ்சாலையில் நரிமேடு கூட்டு ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சதானந்தம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த சதானந்தத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கந்திகுப்பம் குரும்பர் தெருவை சேர்ந்தவர் பொன்னையன் (72). விவசாயி. இவர் பர்கூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கந்தி குப்பம் தேவாலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ பொன்னையன் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பொன்னையனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பொன்னையன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.