வானவில் : இடத்தை அடைக்காத சாம்சங் மானிட்டர்கள்
மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாத (ஆக்கிரமிக்காத) கம்ப்யூட்டர் மானிட்டர்களை உருவாக்கியுள்ளது.
மிகக் குறைந்த இடம், உபயோகிக்காதபோது அந்த இடத்தையும் பயன்படுத்தும் வசதி ஆகியன இந்த மானிட்டர் வடிவமைப்பின் சிறப்பம்சங்களாகும். மானிட்டரின் கேபிள்களும் உள்ளடு செய்யப்பட்டிருப்பதால் (கன்சீல்ட்) அதுவும் வெளியில் தெரியாது. இடத்தையும் அசிங்கமாகக் காட்டாது. மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைகள் (மானிட்டர்) அலுவலகம், வீடு என அனைத்து பகுதியிலும் உபயோகிக்க ஏற்றது.
இதில் முழுவதும் ஹை டெபினிஷன் ரெசல்யூஷன் இருப்பதால் படங்கள் மிகத் தெளிவாகத் தெரியும். வீடியோ படங்கள், இணையதள பக்கங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக பார்க்க முடியும். 32 அங்குல அளவில் வந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். உங்களது தேவைக்கேற்ப இந்த மானிட்டரின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.
இதை நிறுவுவதும் மிக எளிது. இதனுடன் வந்துள்ள 3.5 அங்குல கிளாம்ப் இதை எந்த இடத்திலும் நிர்மாணிப்பதற்கு உதவுகிறது. எவ்வளவு தடிமனான பரப்பிலும் இதை நிறுவ முடியும். எத்தனை முறை மடக்கினாலும் செயல்பாடு பாதிக்காத வகையில் இதன் தொழில்நுட்பம் உள்ளது. இதில் பி.பி.பி. (படத்திற்குள் படம்) எனும் வசதி இருப்பதால் இரண்டு வகையான பணிகளை நிறைவேற்றும் வசதி இதில் உள்ளது.