திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரை மாற்றியதில் எந்த குழப்பமும் இல்லை - பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரை மாற்றியதில் எந்த குழப்பமும் இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

Update: 2019-03-05 22:30 GMT
தாராபுரம், 

அ.தி.மு.க.வில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக பதவியில் இருந்த அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனை, கட்சியின் மேலிடம் நீக்கம் செய்து, அவருக்கு பதிலாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்துள்ளது.

அதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த சில நாட்களாக, புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சித்தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று தாராபுரம் வருகை தந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நகர, ஒன்றியம் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் டி.டி.காமராஜ், ஒன்றிய செயலாளர் சின்னப்பன், செல்வகுமார சின்னையன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பலமான கூட்டணியை அமைத்துள்ளார்கள். அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க. விரைவில் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும்.

ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தி.மு.க. ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு முன்பு 1,000 ரூபாய் நல உதவி வழங்கியபோதும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நல உதவி வழங்குவதையும் திட்டமிட்டு தடுத்து நிறுத்தப்பார்க்கிறார்கள். தி.மு.க.வின் இந்த செயல்பாடுகளை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அதிக வாக்குகளை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து மாவட்ட செயலாளராக உங்களை நியமித்ததற்கு, உடுமலை கே.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள், எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தலைமை கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்களே என்றும், திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் அ.தி. மு.க.வினரிடையே கோஷ்டி வலுப்பெறுகிறதா? என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்கும் போது, “அப்படி எதுவும் இல்லை. இது தலைமை எடுத்த முடிவு. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரை மாற்றியதில் எந்த குழப்பமும் இல்லை. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்“ என்றார்.

மேலும் செய்திகள்